மகான் ஸ்ரீசுப்ரமண்ய
யதீந்திராள்!
சித்தமல்லி கிராமத்தில்
அவதரித்த மகா புருஷர்
- ஸ்ரீசுப்ரமண்ய சாஸ்திரிகள்
என்கிற சுப்ரமண்ய யதீந்திராள்.
குலசேகர ஸ்வாமி கோயிலுக்கு
அருகிலேயே உள்ளது இவரது
அதிஷ்டானம். கி.பி 1866-ஆம்
ஆண்டில் அவதரித்த இவர்,
இளம் வயதிலேயே சாஸ்திரம்
மற்றும் வேதங்களை கற்றார்.
மஹாமஹோபாத்யாய மன்னார்குடி
ராஜு சாஸ்திரிகளிடம்
கல்வி கற்றார். காஞ்சி
மகா ஸ்வாமிகளது இறைப்
பணியில், தன்னையும் ஈடுபடுத்திக்
கொண்டு சேவையாற்றி,
மகா ஸ்வாமிகளின் அபிமானத்தையும்
பெற்றார்.
ஒரு முறை மயிலாடுதுறையில்
யாத்திரை மேற்கொண்டிருந்த
மகா பெரியவாள், அருகே
உள்ள கிராமமான கோழிகுத்தியில்
சரஸ்வதி அம்மாள் என்பவரது
இல்லத்தில் தங்கி இருந்தபடி,
பக்தர்களுக்கு ஆசி வழங்கி
வந்தார். ஒரு நாள், திரண்டிருந்த
பக்தர் கூட்டத்தின் நடுவே
உரை நிகழ்த்தினார் மகா
பெரியவாள். தனது பேச்சில்
ஸ்ரீசுப்ரமண்ய சாஸ்திரிகளை
வெகுவாகப் புகழ்ந்தார்
மகா பெரியவாள். "பொதுவா
ஒண்ணு இருந்தா இன்னொண்ணு
இருக்காது. இது உலகத்தோட
இயற்கை. கல்வி இருக்கும்
இடத்தில் பணம் இருக்காது;
பணம் இருக்கும் இடத்தில்
கல்வி இருக்காது. கல்வி,
பணம் - இவை இரண்டும் இருந்தால்
அங்கே குழந்தைச் செல்வம்
இருக்காது. கல்வி, பணம்,
குழந்தைச் செல்வம் - இவை
மூன்றும் இருந்தால்,
அவரது வீட்டில் எவருக்காவது
உடல் நலன் படுத்திக்
கொண்டே இருக்கும். ஒரு
வேளை இவை நான்குமே சுபமாக
இருந்தால் அந்த கிரஹத்தில்
நிம்மதி இருக்காது. இதை
பரவலாக நாம் பார்க்கக்
கூடிய நிஜம். ஆனால், இதற்கு
விதிவிலக்கானவர் - சித்தமல்லி
சுப்ரமண்ய சாஸ்திரிகள்.
பக்தி, படிப்பு, செல்வம்,
ஆரோக்கியம் முதலான அனைத்து
வளங்களையும் ஒருங்கே
பெற்றவர் இவர். இது இறைவனின்
அருள்! இப்போது அவருடைய
மகளின் கிரஹத்தில் தங்கியபடிதான்,
உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறேன்."
என்றாராம்.
வாழ்வில் சகல வளங்களையும்
பெற்று, குறைவின்றி வாழந்தவர்
சுப்ரமண்ய சாஸ்திரிகள்.
இவருக்கு ஐந்து மகள்களும்,
நான்கு மகன்களும் உண்டு.
ஒரு முறை சுப்ரமண்ய சாஸ்திரிகள்
உடல் நலக் குறையுடன்
காணப்பட்டார். அந்தக்
காலத்தில் இது போன்ற
தருணங்களில், 'ஆபத்சந்நியாசம்'
வாங்கிக் கொள்வார்கள்.
அதாவது, இந்த சந்நியாசத்தை
ஏற்றால், மறு பிறவி எடுத்ததாக
ஆகிவிடுமாம். இதன் மூலம்,
தற்போது இருந்து வரும்
நோய் உள்ளிட்ட பிரச்னைகளில்
இருந்து விடுதலை கிடைத்து
விடும் என்பது சிலரது
நம்பிக்கை.
ஆபத்சந்நியாசத்தை
அவரவரே எடுத்துக் கொள்ளலாம்.
எனினும் பிறகு சந்நியாசியிடம்
சென்று முறைப்படி ஆபத்சந்நியாசம்
எடுக்க வேண்டுமாம்.
முதலை ஒன்று, ஆற்றில்
நீராடிக் கொண்டிருந்த
ஸ்ரீ ஆதிசங்கரரின் காலை
கவ்வி இழுக்க .. இந்த ஆபத்தில்
இருந்து தப்பிக்க ஸ்ரீஆதிசங்கரர்,
ஆபத்சந்நியாசம் எடுத்துக்
கொண்டாராம் (இதற்கு
தன் அன்னையிடம் நிபந்தனை
விதித்தார் என்பது தனிக்கதை).
இதையடுத்து, முறைப்படி
இந்த சந்நியாசத்தை எடுத்துக்
கொண்டார்.
சுப்ரமண்ய சாஸ்திரிகளும்
ஆபத்சந்நியாசம் எடுத்துக்
கொண்டவர். எப்படி?
ஒரு நாள் காஞ்சிபுரத்தில்
மகா பெரியவாளைச் சந்தித்து,
"எனக்கு ஆபத்சந்நியாசம்
வழங்குங்கள்" என்றாராம்
சுப்ரமண்ய சாஸ்திரிகள்.
நீ ஊருக்குப் போ. பண்டிதர்களை
அனுப்புகிறேன்" என்றாராராம்
ஸ்வாமிகள். இதையடுத்து
சில நாட்களில் சுப்ரமண்ய
சாஸ்திரிகளின் உடல் நிலை
மோசமானது. அப்போது,
காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில்
இருந்து ஸாஸ்திரிகளுக்கு
ஆபத்சந்நியாசம் வழங்குவதற்காக
இரண்டு பண்டிதர்கள் சித்தமல்லிக்கு
வந்தனர்.
ஆபத்சந்நியாசம் எடுத்துக்
கொண்டால், மூன்று நாட்கள்
மட்டுமே வீட்டில் தங்கலாம்.
சாஸ்திரிகளோ அப்போது
உடல்நிலை முடியாமல் இருந்தார்.
இந்த நேரத்தில் எப்படி
ஆபத்சந்நியாசம் கொடுப்பது
என்று வந்தவர்களும் வீட்டில்
இருந்தவர்களும் குழம்பினர்.
எனினும் ஆபத்சந்நியாசம்
கொடுக்கப்பட்டது.
இரண்டு நாட்கள் கழிந்தன,
3-வது நாள்... சாஸ்திரிகளின்
உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்
தெரிந்தது. மறுநாள், ஆபத்சந்நியாச
தர்மப்படி சாஸ்திரிகள்
வேறு இடத்தில் தங்க வேண்டும்.
அதற்காக, மடம் ஒன்றும்
தயார் செய்யப்பட்டது.
குடும்பத்தினர் மற்றும்
உள்ளூர்க்காரர்கள் அனைவருக்கும்
ஆசி வழங்கியவர், கிலோ
கணக்கில் கற்பூரத்தைக்
கொண்டு வந்து ஏற்றச்
சொன்னார். கற்பூரம்
கொழுந்து விட்டு எரியும்போது,
சாஸ்திரிகளின் சிரசில்
இருந்து ஓர் ஆத்ம ஜோதி
புறப்பட்டு, கற்பூர ஜோதியுடன்
இரண்டறக் கலந்து வானவெளியில்
செல்வதைக் கண்டதாகச்
சொல்வர்.
அதே நேரத்தில் காஞ்சிபுரம்
மடத்தில் இருந்த மகா
பெரியவாள், "அதோ ... சுப்ரமண்ய
சாஸ்திரிகள் மோட்சத்துக்குப்
போயிண்டிருக்கார், பாருங்கோ"
என்று உடன் இருந்த சிஷ்யர்கள்
மற்றும் பக்தர்களிடம்
வானத்தைக் காட்டிச்சொன்னா??ாம்.
இது நடந்தது கி.பி. 1933-ஆம்
ஆண்டில்! இதுவே இவரது
மகாசமாதி வருடம். சுப்ரமண்ய
சாஸ்திரிகளது 75-வது வருட
ஆராதனை உற்ஸவம் கடந்த
17-12-08 அன்று சித்தமல்லியில்
உள்ள அவரது அதிஷ்டானத்தில்
நடந்தேறியது.
அதிஷ்டானம் வந்து
வணங்கும் பக்தர்களுக்கு
இன்றைக்கும் இன்னருள்
புரிந்து வருகிறார் சுப்ரமண்ய
சாஸ்திரிகள்.
- சக்தி விகடன் . 26-3-09